சென்னை,
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று அடுத்தடுத்து அண்ணன்-தம்பி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் முழுவிவரம்:-
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள ஆயில்சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தம்பி ஸ்டாலின் (24). இவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை ஸ்டாலின், ஆயில்சேரி மெயின் ரோடு ஜங்ஷனில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பெரிய வீச்சரிவாளால் ஸ்டாலினை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலின், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டதும், அந்த வழியாக வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மர்மநபர்கள் ஸ்டாலினை வெட்டிக்கொலை செய்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலையான ஸ்டாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, போலீசார் அங்கு நின்று விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஆயில்சேரி தனலட்சுமி நகர் அருகே உள்ள மாந்தோப்பில் ரெட்டைமலை சீனிவாசனும் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இரவு சுமார் 8.30 மணியளவில் அங்கிருந்த போலீசார், மாந்தோப்புக்குள் சென்று இருட்டில் தேடி பார்த்தனர்.
மாந்தோப்புக்குள் உள்ள புதரில் ரெட்டைமலை சீனிவாசன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் உடல் கிடந்த இடம் ஆவடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் இதுகுறித்து ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து இரட்டை மலை சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஒரே நாளில், ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் போலீசாரும், ரெட்டைமலை சீனிவாசன் ெகாலை தொடர்பாக ஆவடி போலீசாரும் இரு வழக்குகள் பதிவு செய்து இருவரையும் வெட்டிய மர்ம கும்பல் யார்? உள்ளூர் நபர்களா? அல்லது வெளியாட்களா? முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனரா? தொழில் போட்டி காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.