திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 விசேஷ தினங்களையொட்டி விழா நடைபெறுவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடப்பது வழக்கம். அதன்படி வரும் 10ம்தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் 19ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தினமும் அங்குள்ள கவுன்டர்களில் டோக்கன் வழங்கப்படுகிறது. இவ்வாறு டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே 19ம்தேதி வரை கோயிலில் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் அன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. எனவே மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது.
பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 10ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19ம்தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதியில் வழங்கப்படும் எஸ்.எஸ்.டி டோக்கன்களை பக்தர்கள் நிதானத்தை கடைபிடித்து பெற வேண்டும். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க டிக்கெட் மற்றும் டோக்கன்களில் வழங்கப்பட்ட தேதி, நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கான வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம் என்றார்.
The post ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.