சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும்; தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி பாக்கித் தொகையை உடனடியாக விடுவிக்கவும், சமக்ரா ஷிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை வழங்கிடவும், பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.04.2025 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும். இந்த முற்றுகை போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்கள், மற்றும் கட்சி தோழர்கள் திரளாகக் கலந்து கொள்கின்றனர். தமிழகம் மற்றும் மக்கள் நலன் காக்க நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்கு ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
The post ஆளுநர் ரவி, ஒன்றிய அரசுக்கு எதிராக சென்னையில் 25ம் தேதி முற்றுகை போராட்டம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.