ஆளுநர் தலைமையில் மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் 35 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு

6 hours ago 3

ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் தலைமையில் இரண்டாவது நாளாக இன்று துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வருகிறது. இன்றும் இம்மாநாட்டை 35 துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான 2 நாள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று துவங்கியது. இம்மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு அரசு, தனியார் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணைவேந்தர்கள் 49 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தனியார் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த 14 துணைவேந்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 35 துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களை சேர்ந்த எந்த துணைவேந்தர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இந்நிலையில் 2வது நாளாக இன்றும் இம்மாநாடு காலையில் தொடங்கி நடந்து வருகிறது. இம்மாநாட்டில் நேற்று பங்கேற்றவர்களே இன்றும் பங்கேற்றுள்ளனர். இன்றும் 35 துணை வேந்தர்கள் புறக்கணித்தனர். மாலை 5 மணிக்கு இம்மாநாடு நிறைவடைகிறது. தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்திய வழக்கில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும், பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டின் முதல்வரே இருப்பார் என்றும் உச்சநீமதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அறிவிக்கப்பட்டு, துணைவேந்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தையும் அண்மையில் நடத்தினார். ஆனால் இதனையும் மீறி ஊட்டி ராஜ்பவனில் துணைவேந்தர்களுக்கான மாநாடு நடந்ததால் 35 துணை வேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆளுநர் தலைமையில் மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் 35 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article