சென்னை: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.
மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆளுநரை நீக்க வேண்டும், ஜாட் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் -1: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.