ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க ‘டர்டில் வாக்’ என்ற புதிய செயலி விரைவில் அறிமுகம்: வனத்துறை சார்பில் புதிய முன்னெடுப்பு, தற்போது வரை 1,100 ஆமை முட்டைகள் பாதுகாப்பு

3 weeks ago 6

சென்னை: ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்கும் வண்ணம் ‘டர்டில் வாக்’ என்ற புதிய செயலியை வனத்துறையின் சார்பில் முதல் முறையாக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையை பொறுத்தவரை பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் வனத்துறை சார்பில் ஆமை குஞ்சு பொறிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடலோரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இங்கு பாதுகாக்கப்படும். அவை இயற்கையான முறையில் 45 நாள்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளியேறும்.

பொதுவாக, காலை அல்லது மாலை நேரங்களிலேயே முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியேறும். அப்போது அவை சேகரிக்கப்பட்டு கடலுக்குள் விடப்படும். இந்த முட்டைகளை சேகரிக்கும் பணி இரவு 11 மணியளவில் தொடங்கி, அதிகாலை 5 மணி வரை நடைபெறும். கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள் 45 நாள்களுக்கு பிறகு இயற்கையாக பொரிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும்.

அந்தவகையில் பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் இதுவரை 1,100 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுமட்டுமல்லாது, வனத்துறை சார்பில் முதல்முறையாக ‘டர்டில் வாக்’ என்ற புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ஆமை கூடுகளின் எண்ணிக்கை, முட்டைகள் மற்றும் பிற முக்கிய தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது: இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் 120 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநில கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன. நமது கடற்கரைகளிலும் இவை முட்டையிட்டு வருகின்றன. மீனவர்களின் நண்பனாக பார்க்கப்படும் இந்த வகையான ஆமைகள் அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கு அது மிகப்பெரிய இழப்பாகும்.

தற்போது ஆலிவ் ரிட்லி மொபைல் செயலில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்ததாக இதற்கான இணைய அடிப்படையிலான டாஷ்போர்டுகள் தொடங்கும் பணிகளை செய்து வருகிறோம். கடந்தாண்டு 2.21 லட்சம் முட்டைகளை பாதுகாக்கப்பட்டு சாதனை படைத்திருந்தோம். தற்போது 8 மாவட்டங்களில் 45 குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க ‘டர்டில் வாக்’ என்ற புதிய செயலி விரைவில் அறிமுகம்: வனத்துறை சார்பில் புதிய முன்னெடுப்பு, தற்போது வரை 1,100 ஆமை முட்டைகள் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article