
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இந்திய சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.
அதாவது, இந்தத் தொடரில் ஜடேஜா 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டின் சாதனையை முந்தி சாதனை படைப்பார்.
ஆலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 28-ம் இடத்தில் உள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 323 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் 31-வது இடத்தில் உள்ளார். இதனால் இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.