கேடிசி நகர், அக்.11: ஆலங்குளத்தில் சாலை அமைப்பு பணி. பாலம் கட்டுமானப் பணிகளை ராபர்ட் புரூஸ் எம்பி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை- தென்காசி நான்குவழிச்சாலை பணி வேகமாக நடந்து வருகிறது. ஆலங்குளத்தில் ஏற்கனவே இருந்ததுபோன்று நகருக்குள் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. அதில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாலம் அருகில் பள்ளிக்கூடம், மயானம் ஆகிய இடங்களுக்கு செல்ல முடியாத அளவில் பணிகள் நடப்பதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வசதியாக பாலம் அமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூசிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆலங்குளத்தில் அமைக்கப்படும் புதிய பாலம், பள்ளிக்கூடம், மயானத்திற்கு செல்லும் வகையில் அமைக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் பரிசீலனை செய்வதாக தெரிவித்தனர். அப்போது தென்காசி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், பேரூராட்சி தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம், கண்ணன், டிஎஸ்பி. பர்ணபாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ஆலங்குளத்தில் சாலை, பாலம் அமைப்பு பணிகள் appeared first on Dinakaran.