* சிலம்பாறு எனப்படும் நூபுர கங்கையில் பழந்தமிழர் முருகனை வேல் வடிவமாக வழிபட்ட தொன்மை வாய்ந்த திருத்தலம் பழமுதிர் சோலை. இங்கு தான் முருகன் மாட்டுக்கார வேலனாக வந்து காட்சி தந்தாராம் அவ்வைப் பாட்டிக்கு!
* திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ‘இரண்டு அடுக்கு’ கோயில் ஆகும். மலையில் அடர் வனத்துக்கு மத்தியில் அமைந்த கோயிலில் காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமானது. கோயிலும் சேதமடைந்திருந்தது. வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை அகற்ற முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலைக்கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. பிரதான மூலஸ்தானத்தில் அற்புதக் கோலம் கொண்ட முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கில் உள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இங்கே இவருக்கு எப்போதும் ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.
* தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ் பெற்ற தலம் குண்டலீபுரம். இங்குள்ள ரேணுகாதேவி ஆலயத்தில் வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளி நாயகன் முருகப் பெருமான் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. இங்கு போகர் பிரதிஷ்டை செய்த வீர வேலுக்குத்தான் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய உபசாரங்கள் எல்லாம் நடைபெறுகிறது.
* ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள பச்சை மலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு 41- அடி உயரமும், 12- அடி அகலமும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான முருகன் சிலை உள்ளது. சுமார் 1600 அடி உயரம் கொண்ட மலையின் மீது இந்த முருகன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய முருகன் சிலை இது என்று கூறப்படுகிறது.
* மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பொன்னூரில் ஆபத்சகாலேஸ்வரர் கோயிலில் முருகப் பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் அதிசயமாக ஆறுமுகங்களுடன் ஆறு கரங்களுடன் அருளாட்சி புரிகிறார்.
* அரிசிக்கரைப்புதூரில் உள்ள சொர்ணபுரீசுவரர் ஆலயத்தில் உள்ள முருகன், மகாவிஷ்ணுவைப் போல கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.
* திரும்பனையூர் என்ற திருக்கோயிலில் சௌந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமானும், பார்வதியும் இருபுறமும் வீற்றிருக்க நடுவில் முருகப் பெருமான் தன் இடக்கையில் மாம் பழம் ஏந்திய வண்ணம் உள்ளார். இது சோமாஸ்கந்தர் வடிவம் எனப்படும்.
* கடம்பனூர், கடம்பர் வாழ்க்கை, ஆழியூர், இளம் கடம்பனூர், பெருங்கடம் பனூர், கீழ்வேளூர், பட்ட மங்களம், தேவூர் கோயில் ஆகிய திருத்தலங்களில் முருகன் நவலிங்க பூஜை செய்யும் கோலத்தில் இருக்கிறார்.
* சுருளி மலையில் உள்ள இயற்கையான மலைக் குகையில் முருகன் உறைவதால் குகன் என்றும் சுருளி மலையில் இருந்து தரிசனம் தருவதால் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டிக் கோலத்தில் உள்ள முருகன் திருக்கோலம் எழில் நிறைந்தது.
The post ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்! appeared first on Dinakaran.