
புது டெல்லி,
பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் பாதிக்கப்பட்டன. வான்வழிகள் மூடப்பட்டன.
இந்திய எல்லைப்பகுதிகளின் அருகில் உள்ள விமான நிலையங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் எனக்கருதி அந்த விமான நிலையங்கள் மூடப்பட்டன. குறிப்பாக ஜம்மு, ஸ்ரீநகர், லே, ராஜ்கோட், பதான்கோட், பஞ்சாபின் அமிர்தசரஸ் உள்பட 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. 15-ந்தேதி வரை இவை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த 10-ந்தேதி மாலை ராணுவ மோதல் முடிவுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து வான்வழிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று அந்த 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. தற்காலிக மூடல் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், பயணிகள் விமான நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விமானப் போக்குவரத்து நிலையைச் சரிபார்க்கவும், வழக்கமான புதிய தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் வலைதளங்களைக் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், "சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்பை எங்கள் மிகுந்த முன்னுரிமையாகக் கொண்டும், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட்டுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் 2025 மே 13 ஆம் தேதி (இன்று) ரத்து செய்யப்படுகின்றன.
இது உங்கள் பயணத் திட்டங்களை எவ்வாறு சீர்குலைக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் குழுக்கள் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன, மேலும் புதுப்பிப்புகளை உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்பார்கள். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், எங்கள் வலைத்தளம் அல்லது நிறுவன செயலியில் உங்கள் விமான நிலையை சரிபார்க்கவும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நாங்கள் ஒரு செய்தி அல்லது அழைப்பை மட்டுமே தருகிறோம். மேலும் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேபோல் ஏர் இந்தியா தனது எக்ஸ் வலைதளத்தில், "சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கான விமானங்கள் (செவ்வாய்க்கிழமை) மே 13 அன்று ரத்து செய்யப்படுகின்றன.
நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம், மேலும் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
மேலும் தகவலுக்கு, எங்கள் தொடர்பு மையத்தை 011-69329333 / 011-69329999 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது எங்கள் வலைத்தளமான http://airindia.com ஐப் பார்வையிடவும்" என்று பதிவிட்டுள்ளது.