ஆர்எஸ்எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

3 months ago 17

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரை மதப்பகைமையையும் மதக்கலவரத்தையும் திட்டமிட்டு தூண்டும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது. அனைத்து சமூக மக்களுக்கிடையேயான நல்லிணக்கம், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு, ஒருங்கிணைந்த வளர்ச்சி என மேலெழுந்த வாரியாக பேசுவதும் ஆனால், அதே சமயத்தில் மதவெறி நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலை பின்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என இரட்டை வேடம் போடுகிற ஆர்.எஸ்.எஸ் பாணியை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தன்மையிலேயே அதன் தலைவரது உரை அமைந்திருக்கிறது.

நமது நாட்டின் அடிப்படையான மதச்சார்பின்மை கோட்பாட்டை முன்னெடுக்கும் அரசியல் கட்சியினரை ‘சுயநலமிகள்’ என்றும் அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும், மோகன் பகவத் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும் பதற்றமான நிலையை நீடிப்பதாகவும் கற்பனையான கதையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார். அவரது இத்தகைய பேச்சு கடும் கண்டனத்துக்குரியதாகும்.

பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மாறாக பாஜ ஆளும் மாநிலங்களில்தான் கும்பல் படுகொலைகள், பெண்கள்-குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலும், புல்டோசர் இடிப்புகளும் அன்றாட நடவடிக்கைகளாக இருக்கிறது என்பதை மோகன் பகவத் வசதியாக மறைக்கிறார்.

இந்தியாவின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவம், சமூக நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைவாத அரசியல், மதவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நமது நாட்டின் மாண்பை பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

The post ஆர்எஸ்எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article