ஆர்.கே.பேட்டை, ஏப்.29: ஆர்.கே.பேட்டை அடுத்த வீரமங்கலம் ஊராட்சியில், ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான இலக்காக 4,811 வீடுகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அதேபோல், 2024-25ம் ஆண்டுக்கான இலக்கு 7,136 வீடுகள் ஆகும். ஆக மொத்தம் பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான மொத்த இலக்காக 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகு தொகையான ரூ.2 லட்சம், வீட்டின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இல்லாததால் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக வீட்டின் கட்டுமான தொகையினை சமவெளி பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,07,000 எனவும், மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,73,000 எனவும் (ஒன்றிய அரசின் அலகுத்தொகை ரூ.2 லட்சம் உட்பட) உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சியில் ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு 15 வீடுகள் கட்ட அனுமதி அளித்தது. அதன்படி, ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் வீதம் 15 வீடுகளுக்கு ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பணிகள், ஒரு மாதத்தில் முடித்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post ஆர்.கே.பேட்டை வீரமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டும் பணி விறுவிறு appeared first on Dinakaran.