நன்றி குங்குமம் தோழி
நீண்ட பளபளப்பான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும். இந்த கூந்தலை பெற பெண்கள் தங்களின் தலைமுடியினை முறையாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பராமரிப்பார்கள்.பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால், அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு
தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.
பொடுகு மற்றும் முடி கொட்டுதல் பிரச்னையை தவிர எண்ணெய் பசையுள்ள தலையும் ஒரு பிரச்னையே. இதனை போக்க மிதமான ஷாம்புவை பயன்படுத்தி சீரான முறையில் தலை
முடியை அலச வேண்டும்.முடியின் ஆரோக்கியத்துக்கு உதவியாக துணை புரிவது புரதச்சத்து. ஆகவே முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கேரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். காற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியினை வறண்டு போக செய்ய வாய்ப்புள்ளது. இதனால் முடி வறண்டு கலையிழந்து போகும்.
முடி பராமரிப்பு முறை
* வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்கவும். அகண்ட பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்த வேண்டும். ஈரத்துடன் இருக்கும் போது கூந்தலை கட்டக் கூடாது. ஹேர்
ட்ரையர் பயன்படுத்தும் முன் முடியை உலர்த்தவும்.
* உணவில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துக் கொள்வதை அவசியமாக்க வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.
* வாரத்துக்கு ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.
* கீரை மட்டுமில்லாமல் சுண்டல், நவதானிய சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.
* பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, ‘பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.
* நீண்ட கூந்தலைக் கொண்டவர்கள் குறுகிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தும் போது முடி உடையக்கூடும். அதற்கு பதிலாக ‘பிரஷ்’ போன்ற அமைப்புடைய சீப்பை உபயோகிப்பது சிறந்தது.
* இரவில் தூங்க செல்லும் முன் கூந்தலை நன்றாக வாரி பின்னலிட்டு தூங்க வேண்டும். தலைமுடியை விரித்தவாறு தூங்கும் போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உயர்ந்து சேதம் அடைய வாய்ப்புள்ளது.
* முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* கூந்தலின் நுனிப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். அதனை அவ்வப்பேது வெட்டி சீராக்கினால் முடி உடையாமல் பாதுகாக்க முடியும்.
* தலைக்கு குளித்த பிறகு கண்டிப்பாக கண்டிஷ்னர் பயன்படுத்த வேண்டும்.
* கூந்தலை உலர வைக்க ட்ரையர் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
* ஈரமான கூந்தலை சீப்புக் கொண்டு வாரி சிக்கெடுப்பதை தவிர்க்க வேண்டும்
* தலைமுடி நன்றாக உலர்ந்த பிறகு கை விரல்களால் சிக்கினை நீக்கிவிட வேண்டும்.இதனை முறையாக பராமரித்தால் ஆரோக்கியமான கூந்தல் உறுதி.
The post ஆரோக்கிய முடி வேர்கால்களுக்கு எண்ணெய் மசாஜ் அவசியம்! appeared first on Dinakaran.