சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, கனமழை பெய்தது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக 1000 கன அடியும், படிப்படியாக 6000 கன அடியும் என ஏரியிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. தற்போது, மழை நின்றதால் ஏரியின் நீர்வரத்து குறைந்ததால், ஏரியிலிருந்து 1500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து நீர் வருகிறது. ேமலும், ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டால், எந்தெந்த பகுதி வழியாக உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கிறது என்பது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
மழை இல்லை என்று யார் சொன்னது. தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்காரர் சொல்லி இருப்பார். வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி எவ்வளவு நீர் வந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். எந்த குறையும் நான் சொல்ல விரும்பவில்லை. குறைகள் இருந்தால் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும், அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அதிமுக எங்களை பாராட்டியா தீர்மானம் போடுவார்கள், அப்படி போட்டால் தான் எதிர்க்கட்சி. அப்படி போடவில்லை என்றால் நானே கேட்பேன் என்ன எதிர்க்கட்சி என்று.
நீர்வளத்துறைக்கு மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. ஒரு பக்கம் தூர்வாரினால் ஒரு பக்கம் நின்று விடுகிறது. எல்லாவற்றையும் தூர்வார போதிய நிதி ஆதாரம் இல்லை. அதனை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அனைத்தையும் தூர்வாருவது என்பது ஒரே நேரத்தில் முடியாத பிரச்னை. செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று கூறியதற்கு பொதுவாகவே நமது சமுதாயத்தில் ஏதாவது பிரச்னை என்றால் அவை அனைத்தையும் அருகில் உள்ள ஏரி கால்வாய்களில் குப்பையாக கொட்டி செல்வதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதனை கைவிட வேண்டும். இவ்வாறு குப்பைகளால்தான் வட ஆற்காடு மாவட்டத்தில், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றில் அடைப்பு ஏற்பட்டது. மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ஆரஞ்சு, ஆப்பிள் எது போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.