ஆயுள் கைதியை வீட்டு வேலைக்கு வைத்து தாக்கிய விவகாரம்; சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

4 months ago 10

சென்னை: வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்று பணம், நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும், அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத்தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, இந்த விவகாரத்தில் சிபிசிஐடி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையை பார்த்த நீதிபதிகள், இந்த அறிக்கையில் வீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிறை கைதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்தே? அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?. குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சிறை குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், சிறைக்கு வெளியே நடந்த சம்பவத்திற்கு எப்படி சிறை குற்ற வழக்குப் பதிவு செய்ய முடியும். சிறையில் உள்ள விலை உயர்ந்த தேக்குமரத்தை வெட்டி கட்டில் உள்ளிட்டவை செய்துள்ளனர். நல்ல சம்பளத்துடன் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற புகார்கள் வருவது கவலைப்பட வைக்கிறது. கடைநிலை ஊழியர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

The post ஆயுள் கைதியை வீட்டு வேலைக்கு வைத்து தாக்கிய விவகாரம்; சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article