திருப்பூர்: ஆயுதபூஜை திருவிழாவை ஒட்டி, திருப்பூர் மாநகர வீதிகளில் தேங்கும் குப்பையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களின் நலனும், குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் நலனும் ஒருசேர பாதுகாக்கப்பட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் 600 மெட்ரிக் டன் கணக்கில் நாள்தோறும் அப்புறப்படுத்தப்படுகிறது. ஆயுதபூஜை நாட்களில் குப்பைகள் அதிகளவில் வெளியேறும். அதிலும் குறிப்பாக திருப்பூர் தொழில் நகரம் என்பதால் பனியன் நிறுவனங்களின் குப்பைகள், தொழிற்சாலைகளின் குப்பைகள் மற்றும் வீடுகளின் குப்பைகள் என வீதிதோறும் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. இந்த நாட்களில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.