ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மணிப்பூரில் கடையடைப்பு போராட்டம்

6 months ago 16

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் வன்முறை சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனிடையே மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சிகளால் அங்கு படிப்படியாக அமைதி திரும்பி வரும் நிலையில், அவ்வப்போது சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், தவுபால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுவை சேர்ந்த 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் குக்கி ஆயுதக்குழுவினரிடம் இருந்து தங்கள் கிராமங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் என்று கடையடைப்பு போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article