ஆயுத பூஜை கொண்டாட்டம் களைக்கட்டியது; திருச்சி காந்தி மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்

3 months ago 16

திருச்சி: செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அந்த தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை தெய்வமாக போற்றும் விதமாக அவற்றையும் கடவுளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை. அன்றைய தினம் ெதாழில் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மறுநாள் விஜயதசமி அன்று தொழில் துவங்கினால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். குழந்தைகள் படிப்பை துவங்கவும் இந்நாளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை (11ம் தேதி) ஆயுதபூஜை, மறுநாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை அன்று வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பொரி, பழங்கள், இனிப்புகள் வைத்து பூஜை செய்வார்கள். மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், பூமாலை அணிவித்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். அதேபோல் பஸ், லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை கழுவி சந்தனம், குங்குமம் வைத்து பூமாலை கட்டி வழிபடுவர்.

இதற்கு தேவையான பூ, பழங்கள், பொரி, அவல் உள்ளிட்ட பூஜை பொருட்களும், அலங்கார தோரணங்களும் வாங்க கடைவீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்காக திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பூசணிக்காய் கிலோ ரூ.15க்கு விற்கப்பட்டது. வாழைக்கன்று ஜோடி ரூ.30க்கும், தோரணம் 5 ரூ.20க்கும், வாழை இலை 3 ரூ.20க்கும் விற்கப்பட்டது.

திருச்சியில் பூக்கள் விலை அதிகரித்திருந்தது. மல்லிகை, முல்லை ஒரு கிலோ ரூ.600, சம்பங்கி ரூ.400, செவ்வந்தி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ250, விச்சிபூ ரூ.250, அரளி ரூ.600, கோழிக்கொண்டை ரூ.100, சென்டி பூ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழைப்பழம் பழத்திற்கு ஏற்றவாறு ஒரு சீப்பு ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை பழம் கிலோ ரூ.160, ஒரு பழம் ரூ. 10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆயுதபூஜையை முன்னிட்டு, நாளை மற்றும் சனி, ஞாயிறு என 3 நாட்களுக்கும் விடுமுறை. தொடர் விடுமுறை வருவதால், திருச்சியில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினமே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அதேபோல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் திருச்சி வழியாக சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்றும், இன்றும் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. மக்கள் வசதிக்காக அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

The post ஆயுத பூஜை கொண்டாட்டம் களைக்கட்டியது; திருச்சி காந்தி மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article