கோவில்பட்டி: தமிழகத்தில் கோவில்பட்டி உள்பட பல்வேறு ஊர்களில் கைவரிசை காட்டிய 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 பவுன் தங்கக் கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து நகை, பணம் ெகாள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. இதையடுத்து கோவில்பட்டிக்கு வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களை அனைத்து ‘செக் போஸ்ட்’களிலும் கண்காணித்து தீவிரமாக சோதனை நடத்தும்படி எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகந்நாதன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் எஸ்ஐக்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், வேல்பாண்டி மற்றும் போலீசார் கோவில்பட்டி இளையரசனேந்தல், சாத்தூர், பசுவந்தனை ஆகிய ‘செக் போஸ்ட்’ களில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
கோவில்பட்டி இளையரசனேந்தல் ‘செக் ேபாஸ்ட்’டில் நேற்று மாலை ராஜபாளையம், திருவேங்கடம் வழியாக கோவில்பட்டிக்குள் நுழையும் வாகனங்களை சோதனை நடத்திய போது, 2 பைக்குகளில் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு 4 பேர் வந்தனர். அந்த பைக்குகளை வழிமறித்து போலீசார் சோதனை நடத்திய போது, பைக்கின் பின் சீட்டில் இருந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களையும், பைக்கை ஓட்டி வந்த 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம், அகரம்தேன், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மோகன் என்ற சகாயராஜ் (48), திருத்தணி, பாலாஜி நகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சதீஷ் (37), விருதுநகர் மாவட்டம், சாத்தூர், காமராஜர் நகர், கணேஷ் தெருவைச் சேர்ந்த முத்துராஜா (43), சென்னை, அம்பத்தூர், பானு நகரைச் சேர்ந்த பொன்முருகன் (53) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதாவது பைக்குகளில் ஹெல்மெட் அணிந்தவாறு செல்லும் இவர்கள் பகலில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து இரவில் அந்த வீட்டில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு கோவில்பட்டி, புதுஅப்பனேரி, சக்கரபாணி நகரைச் சேர்ந்த நல்லசிவன் (67) என்பவது வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து பல்வேறு வீடுகளை உடைத்து நகை, பணத்ைத கொள்ளையடித்துள்ளனர். அவர்களிடமிருந்து 16 பவுன் தங்கக்கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளி கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 4 பேர் மீது தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.2ல் ஆஜர் செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவில்பட்டி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாருக்கு பாராட்டு
தமிழகத்தை கலக்கிய கொள்ளையர்கள் 4 பேரை செக்போஸ்ட்களை கண்காணித்து பிடித்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகந்நாதன், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், எஸ்ஐக்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், வேல்பாண்டி மற்றும் போலீசாரை எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டி கவுரவித்தார்.
The post சென்னை, கோவில்பட்டி உள்பட பல்வேறு ஊர்களில் கைவரிசை; `பலே’ கொள்ளையர் 4 பேர் கைது: 16 பவுன் தங்ககட்டி, அரை கிலோ வெள்ளி கட்டி பறிமுதல் appeared first on Dinakaran.