சென்னை:
இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 3-ம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒன்பதாவது நாளான இன்று ஆயுத பூஜை என்று அழைக்கப்படும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அனைத்து இடங்களிலும் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் கலைவாணியின் திருவுருவ புகைப்படத்தின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலிட்டு வழிபட்டனர். சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைத்து வழிபட்டனர்.
நாளை (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது. நவராத்திரியின் 9 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.