சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ரவுடி சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கில் கைதான கோடம்பாகத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஜாமீன் கோரி 3 பேர் மனு தாக்கல்: காவல்துறை பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.