
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், பொதுமக்கள் 24 பேரும் என 270 பேர் பலியானார்கள். விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை வரை, 135 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன என்றும் 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் குஜராத், மராட்டியம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டையூவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் டி.என்.ஏ. விவரக்குறிப்பு இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நிறைவடையும் என்று ஆமதாபாத் சிவில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.