ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

6 hours ago 1

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு அருகே சோய்த்தலா வீட்டை சேர்ந்தவர் ஜூனைத்(வயது 32). யூ-டியூபரான இவர், பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். இதற்கிடையே இவர், சமூக வலைத்தளம் மூலம் இளம்பெண் ஒருவரிடம் நட்பாக பழகினார். தொடர்ந்து அவர், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி கடந்த 2 ஆண்டுகளாக மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அவர், இளம்பெண்ணை ஓட்டல், லாட்ஜ்களுக்கும் அழைத்து சென்று தங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவர், இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மலப்புரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மலப்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.விஷ்ணு, சப்-இன்ஸ்பெக்டர் பிரியன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தகவல் அறிந்து ஜூனைத் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் இவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு பெங்களூரு விமான நிலைய பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூரு விமான நிலைய பகுதிக்கு சென்று பெங்களூரு மாநகர போலீசார் உதவியுடன் அங்கிருந்த ஜூனைத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து கைதான அவரை மலப்புரம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read Entire Article