
புதுடெல்லி,
இந்திய டெஸ்ட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்திய சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் இவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யும் நிலைக்கு பி.சி.சி.ஐ தள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திலும் பி.சி.சி.ஐ உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பல வீரர்களும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் டெஸ்ட் அணியில் இருந்து விலகி இருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதன் காரணமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் போதே அவர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.