சென்னை: தமிழகத்தில் இணையவழி குற்றவாளிகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையில் பொதுமக்களை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதுவிதமான மோசடியில் சைபர் குற்றவாளிகள் இறங்கியுள்ளனர். குறிப்பாக ஆபாச இணையதளங்களை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் வயதான நபர்களை குறிவைத்து சைபர் மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.
அதன்படி ஆபாச இணையதளம் மூலம் ஆபாச படங்களை தங்களது செல்போன் மற்றும் கணினிகளில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் நபர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் சட்டவிரோதமாக இளம் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளீர்கள், இதனால் உங்கள் ஆபாச படம் பார்த்த செல்போன் மற்றும் கணினி முடக்கப்பட்டுள்ளதாக முதலில் எச்சரிக்கின்றனர். பிறகு, இந்திய தண்டனை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதால் சம்பந்தபட்ட நபருக்கு ரூ.30,290 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அபராத தொகையை நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர்.
இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மோசடி நபர்கள் கூறியபடி, கிரெடிட் கார்டு நம்பர்கள் மற்றும் ரகசிய எண்களை தெரிவிக்கின்றனர். அடுத்த சிறிதுநேரத்தில் சம்பந்தபட்ட நபரின் கிரெடிட் கார்டுகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. அதன் பிறகே இது மோசடி நபர்களின் செயல் என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரிய வருகிறது. அதேநேரம் ஆபாச இணையதளம் பார்த்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே கூற அச்சமடைந்து மறைப்பதால் மோசடி நபர்கள் இந்த ஆபாச இணையதளம் மோசடியை பெரிய அளவில் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கவனமாக இருக்க மாநில சைபர் க்ரைம் சில அறிவுரைகள் தெரிவித்துள்ளனர்.
* இணையதளத்தில் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும், அரசு இணையதளத்தை போலவே போலியான இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்கின்றனர். ஆனால் அரசு இணையதளத்திற்கும் மோசடி நபர்களின் இணையதளத்திற்கு சிறிய வேறுபாடுகள் இருக்கும். அதை பொதுமக்கள் கவனமாக பார்க்க வேண்டும்.
* போலி இணையதளத்தில் பெரும்பாலும் எழுத்துப்பிழைகள் இருக்கும். அரசாங்க இணையதளங்கள் எப்போது gov.in என்று முடிவடைவதால், டொமைன் பெயரை கவனமாக பார்க்கவும்.
* பாப்-ஆப்களில் எச்சரிக்கையாக இருங்கள். எந்த இணையதளத்தையும் அணுகும்போது, பாப்- ஆப்களை கவனமாக பார்த்து தேவைப்பட்டால் மட்டும் அனுமதிக்கவும்.
* இணையதளங்களில் காட்டப்படும் விளம்பரங்கள் முறையற்ற ஆதாரங்களில் இருந்து இருக்கலாம். அத்தகைய விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டாம்.
* கிரெடிட்கார்டு எண், சிவிவி போன்ற முக்கியமான நிதித்தகவலை உள்ளிடுவதற்கு முன் எப்போதும் பல முறை யோசியுங்கள். இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலை சந்தித்திருந்தால், சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து புகார் அளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று மாநில சைபர் க்ரைம் தெரிவித்துள்ளனர்.
The post ஆபாச இணையதளத்தை பார்த்தால் செல்போன் முடக்கம் என கூறி இளைஞர்கள், வயதானவர்களை குறிவைத்து கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த கூறும் நூதன மோசடி: மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.