
புதுடெல்லி,
பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி, பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியையும், 3 பேர் 'இந்தியா' கூட்டணியையும் சேர்ந்தவர்கள்.ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் அளிக்க செல்லும் முன்பு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பயங்கரவாதத்தால் நாம் 26 உயிர்களை இழந்தோம், பயங்கரவாதத்தால் இந்த நாட்டில் உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது பற்றிப் பேச விரும்புகிறோம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். பல்வேறு கட்டுக் கதைகளை உருவாக்க முயற்சிக்கும் ஏராளமான சுயநலவாதிகள் இருப்பதால் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் என்ன நடந்தது என்பதை விளக்கவும், என்ன நடந்தது என்பது குறித்த எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழுக்கள் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன
என்ன நடந்தது என்பது பற்றி இந்தியா ஏற்கனவே பேசியுள்ளது. இரண்டு நிலைப்பாடுகள் இல்லை. நாங்கள் எவ்வாறு தாக்கப்பட்டோம், நாங்கள் எவ்வாறு பதிலளித்தோம், இதற்கு எவ்வாறு தீர்வு காண விரும்புகிறோம் என்பது பற்றி அவர்கள் மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசியுள்ளனர். எனவே, நாங்கள் ஏற்கனவே கூறிய அதே விஷயத்தை விளக்க விரும்புகிறோம்.
இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது மிக முக்கியமான விஷயம். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கனிமொழி எம்.பி. கூறினார்.