
பெங்களூரு,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள சூழலில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.05 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏ.ஐ.-2820 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது.
அந்த விமானம் புறப்படும் முன், பாதுகாப்பு தொடர்புடைய காரணங்களுக்காக பயணி ஒருவர் கீழே இறக்கி விடப்பட்டு உள்ளார். இதனை ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். எனினும், வேறு எந்தவித தகவல்களையும் பகிர முடியாது என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி தொடர்ந்து அவர் கூறும்போது, பயணியை இறக்கி விடுவதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அது வழக்கம்போல் நடைபெற கூடிய ஒன்று அல்ல. இந்த விவரங்களை நாங்கள் வெளியிட முடியாத சூழலில் இருப்பதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.