
புதுடெல்லி,
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
அவர் எக்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்தவித சமூக ஊடகத்திலும் இதுவரை எதுவும் பேசவில்லை. பாகிஸ்தான் தாக்குதலின்போது, அதனை எதிர்கொள்வது பற்றி முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் அவர் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
இதில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பின்னர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அது அதிக கவனம் பெற்றது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி, மக்களிடம் இன்று பேசுகிறார். இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.