திருப்பூர், பிப்.10: திருப்பூர் பல்லடம் சாலை மாநகரின் பிரதான போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் சார்பில் சாலையின் நடுவில் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் முதல் அருள்புரம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பான முறையில் வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் மார்க்கெட் பகுதிக்கு அதிக அளவு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தவிர்க்கவும் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடந்து செல்வோர் எளிதில் சாலையை கடக்கும் வகையில் ஒரு சில பகுதிகளில் தடுப்புக் கற்கள் அகற்றப்பட்டது. அந்த பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் இருப்பதால் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
The post ஆபத்தை உணராமல் சாலை தடுப்பின் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.