சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. அதேசமயம், திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும் போது, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு பணம் வைத்து மட்டுமே ஆட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆன் லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் அந்த விதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள வர்த்தகம் செய்யும் உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விதிகளை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்பவர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப விதியில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், எந்த காரணமும் இல்லாமல், அறிவியல்பூர்வமான புள்ளி விவரங்கள் சேகரிக்காமல், சம்மந்தப்பட்டவர்களை கலந்து ஆலோசிக்காமல் அறிவிகிப்பட்டுள்ள இந்த விதிகள் ஒன்றிய அரசின் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The post ஆன்லைன் ரம்மி புதிய விதிகளுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.