சென்னை: ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் சைபர் குற்றவாளிகள் தமிழகத்தில் 2024ம் ஆண்டு மட்டும் ரூ.1,674 கோடி மோசடி செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளின் 20,453 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் பல்வேறு தவறான தகவல்கள் மூலம் பணம் மற்றும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக 2024ம் ஆண்டு சைபர் க்ரைம் உதவி எண் 1930க்கும் 2,68,875 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. மேலும், 2024ம் ஆண்டில் நிதி மோசடிகளில் தொடர்பாக 34,392 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய இணையவழி குற்றத்தடுப்பு அறிக்கையில் 1,27,065 புகார்களும், அவற்றில் 4,326 புகார்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 80,206 புகார்கள் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2024ம் ஆண்டு இணையவழி மோசடிகளில் ரூ.1,674 கோடி பொதுமக்கள் இழந்துள்ளனர். அதில் 772 கோடி முடக்கப்பட்டு, சுமார் ரூ.83.34 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மோசடி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் இருந்து 20,453 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு சட்டவிரோத மற்றும் ேமாசடி இணையதளங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை மூலம் 52 இணையதளங்கள், 274 யூடியூப் சேனல்கள், 837 பேஸ்புக் பக்கங்கள், 608 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், 55 டிவிட்டர் பக்கங்கள், 3 கூகுள் பிளேஸ்டோர் போலி கடன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் பயன்படுத்திய 66,217 சர்வதேச செல்போன் கருவி அடையாள எண் (ஐஎம்இஐ) முடக்கப்பட்டு, 48,031 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 16,317 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆன்லைன் மூலம் சைபர் குற்றவாளிகள் தமிழகத்தில் 2024ம் ஆண்டு பொதுமக்களிடம் ரூ.1,674 கோடி மோசடி: குற்றவாளிகளின் 20,453 சிம் கார்டுகள் முடக்கம் appeared first on Dinakaran.