சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த தற்கொலைகளில் 77 உயிரிழப்புகள் திமுக ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, புதிய சட்டத்தை இயற்றியோ ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கப் போகிறதா? அல்லது தற்கொலைகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவரது குடும்பம் கடனுக்கும், வறுமைக்கும் ஆளானதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெண்ணிலாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.