ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

7 hours ago 3

குற்றாலம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 30). இவர் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27). இவர்களுக்கு பிரதீஷா (5), தேசிகா (4), தர்சிகா (2) ஆகிய 3 மகள்களும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன் ஸ்டெல்லா எஸ்தரின் தாயார் ஜெயா வங்கி கடன் மூலம் வீடு ஒன்று வாங்கினார். அந்த வீட்டை ஸ்டெல்லா எஸ்தருக்கு கொடுத்தார்.

ஜெயாவிற்கு சொந்தமான வீடு ஊருக்கு வடக்கே காட்டு பகுதியில் உள்ளது. அங்கு அவர் மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.அவருக்கு உதவியாக ஸ்டெல்லா எஸ்தர் மாடு பராமரிக்கும் வேலையை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீட்டு கடனை அடைத்து வந்தார்.

ஸ்டெல்லா எஸ்தரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு குறுந்தகவல் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிந்து கொண்டார். அதில் வந்த லிங்க் மூலம் கடந்த மாதம் ஆன்லைனில் விளையாட தொடங்கினார். முதலில் சிறிது பணம் ஆன்லைன் நிறுவனம் மூலம் ஸ்டெல்லா எஸ்தர் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.இதனால் ஆன்லைன் மூலம் வரும் பணத்தை கொண்டு வீட்டு கடனை எளிதாக கட்டிவிடலாம் என்ற ஆசையில் தனக்கு தெரிந்த சிலரிடம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் பெரிய அளவில் பணம் வராததால் ஏமாற்றம் அடைந்தார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் குடும்பத்தில் தகராறும் ஏற்பட்டது. பணத்தை இழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட ஸ்டெல்லா எஸ்தர் கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் தனது தாய் வீட்டிற்கு சென்றார். குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்றார்.அங்கு வயலுக்கு தெளிக்கக்கூடிய பூச்சிக் கொல்லி (விஷம்) மருந்தை குடித்து மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயை இழந்த 4 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article