சென்னை: ஆன்லைனில் பணம் கட்டி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இனி கேம் விளையாட தடை விதிக்கப்படுவதாக கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் பணத்தை இழந்து தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டன.
அதன்படி, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டு இதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதின் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்படி, ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்துவது, அந்த விளையாட்டுகளை அளிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பது உட்பட பல்வேறு பணிகளை ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் ஆன்லைன் கேம் விளையாட்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
* 18 வயதுக்கு உட்பட்ட பயனாளர்கள் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.
* ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளில் உள்நுழைய ஆதார் அட்டை எண் மற்றும் ஓடிபி மூலம் ஆய்வு செய்து விளையாட அனுமதிக்க வேண்டும்.
* நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளுக்கு பயனாளர்களை அனுமதிக்க கூடாது.
* பயனாளர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விளையாடினால் 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
* ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக கே.ஒய்.சி வாங்க வேண்டும்.
* ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் இயல்பைக் கொண்டது என்பது போன்ற எச்சரிக்கை வாசகம் ஆன்லைன் விளையாட்டு செயலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆன்லைனில் கேம் விளையாட்டுவதற்கான வரையறையை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆன்லைனில் பணம் கட்டி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கேம் விளையாட தடை: புதிய கட்டுப்பாடுகளுடன் அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.