?ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த தங்களின் ஆலோசனை என்ன?
– ஹரி, மேலூர்.
காலையிலோ மாலையிலோ கொஞ்ச நேரமாவது கடவுளை நினைக்க முயலுங்கள். பிறகு இது சாப்பிட உட்காரும் நேரம். வேலை ஆரம்பிக்கும் நேரம் என்று தொடர வேண்டும். இப்படி அதிகரித்துக் கொண்டால், வளரும் கொடிக்கு கொம்பு கிடைத்ததுபோல் மனம் ‘சிக்’ என்று கடவுளைப் பற்றிக்கொள்ளும்.
?எதற்குதான் விளம்பரம் என்று கிடையாதா? இறைப் பணிகளுக்குக் கூடவா விளம்பரம் செய்துகொள்ள வேண்டும்?
– கே. கிருஷ்ணசாமி, நடுவயல்.
தவறில்லை என்றுதான் சொல்வேன். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள், தம் செயலையும் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்களே, அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உதாரணமாக ஒரு அன்பர் கோயிலுக்கு நாலைந்து டியூப் லைட்டுகளை அன்பளிப்பாக கொடுத்து, அவற்றில் இன்னார் உபயம் என்று தன் பெயரைப் போட்டுக்கொள்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அதைப் பார்க்கும் சிலர், ‘தன் பெயரை எழுதி முழு வெளிச்சமும் கிடைக்காமல் செய்துவிட்டாரே’ என்று விமர்சிக்கலாம். அதேசமயம், அதைப் பார்க்கும் இன்னொருவர், ‘அட, நாமும் இப்படி ஏதாவது செய்து நம் பெயரையும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாமே’ என்று நினைக்கலாம். இதனால் விளம்பர ஆர்வம் அதிகரித்தாலும், கோயிலுக்கான ஆக்கப்பூர்வமான செயல்களும், வசதிகளும் பெருகுகிறதே, இதையும் நாம் கவனிக்க வேண்டும்.
?ராமலிங்க சுவாமிகள் வடலூரில் இறைவனை ஜோதி தரிசனமாகக் கண்டார். ஏன், உருவ வழிபாட்டினை அவர் தவிர்த்தார்?
– ப்ரவின், சந்தவாசல்.
சாதாரண நிலைகளைக் கடந்தவர் ராமலிங்க சுவாமிகள். அவர் கடவுளை ஜோதி சொரூபமாக உணர்ந்திருக்கிறார். பக்தியில் அதிகமாக முன்னேறுபவர்களுக்கு அந்த நிலை ஏற்படும்! ராமலிங்க சுவாமிகளும் உருவத்தை வழிபட்டிருக்கிறார். திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், கந்தக் கோட்டம் குமரனையும் வழிபட்டவர் அவர்.
?இறைவன் தங்கள் முன் தோன்றி, ஒரு வரம் தருவதாகக் கூறினால், என்ன கேட்பீர்கள்?
– ஜி.கே. நாராயணமூர்த்தி, மேலசெவலப்பாளையம்.
இறைவனே கண் முன் தோன்றிடும்போது வரமாக எதையாவது கேட்கத் தோன்றுமா என்ன? புராண நாட்களிலிருந்தே இறைவனை காண்பதற்காக கடுந்தவம் இயற்றுவதும், அவர் தோன்றிய உடனே தனக்கு தேவையானதை
கேட்டுப் பெறுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இறையருளை தவிர சுயநலமாக எதையாவது எதிர்பார்த்து அவர் தனக்கு முன் தோன்ற வேண்டும் என்று நினைப்பது அறியாமை. ஒன்றுமில்லை, திருப்பதி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறீர்கள். அவரை நேரடியாக தரிசிக்கும் முன் அது வேண்டும், இது வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலை மனசுக்குள் தயாரித்துக் கொள்கிறீர்கள். ஆனால், கருவறைக்கு போனதும், ‘ஜரகண்டி’ தள்ளுதலில் எத்தனை கோரிக்கைகளை இறைவன் முன் நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது? புத்திசாலி பக்தன், வேங்கடவனின் பார்வை தன் மீது விழுந்தால் போதாதா என்றுதான் எதிர்பார்ப்பான். ஆகவே, கடவுளையே கண்ணெதிரே கண்ட பின்னர், கேட்பதற்கு அதைவிட உயர்வாக என்னதான் இருக்கமுடியும்? என் எதிரே மட்டுமல்ல, வேறு எவர் முன்னர் தெய்வம் தோன்றினாலும் அப்படித்தான் எண்ணமுடியும். அந்த ஞானஒளி தோன்றிய மறுகணம் நம்முடைய அஞ்ஞான இருள் தானே அகன்றுவிடும்.
?கோயிலில் விக்ரகத்துக்கு வைரக்கிரீடம் அணிவிப்பதும், நகைகள் போடுவதும் அவசியம்தானா?
– ஹம்ஸா, கண்டரக் கோட்டை.
வீட்டில் நமக்குப் பிரியமான குழந்தைக்கு நகைகள் செய்து போட்டுப் பார்த்து ஆனந்தம் அடைகிறோம். குழந்தை அவற்றைக் கேட்டதா? அதற்கு அது அவசியம்தானா? பெரியோர்கள் புராதனமான நகைகளைப் போற்றி வைத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் போட்டுக்கொள்ளும்போது மகிழ்ச்சி அடைகிறோம். அது அவசியம்தானா? இருந்தும், நம்முடைய அன்பையும் மரியாதையையும் காட்டுவதற்காகத்தான் அப்படி அணிவித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
அதேபோல நமக்கு எல்லா நன்மைகளையும் அருளும் இறைவனை அழகுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் விதவிதமாகக் கற்பனை செய்து அலங்காரம் செய்து மகிழ்கிறோம். மதிப்பு வாய்ந்த நகைகளைச் செய்து போட்டுத் தரிசித்து மகிழ்கிறோம். இதனால் நமக்கு ஆனந்தமும், அமைதியும் ஏற்படுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
?மனம், மூளை இரண்டும் ஒன்றா?
– அருண், திருச்சி.
மூளையின் சூட்சுமம்தான் மனம் ஒன்றை நினைக்கிறோம் என்றால் மூளைதான் நினைக்கிறது. ஆனால், மூளை நினைப்பதாக நாம் சொல்வதில்லை “உன்னை நினைத்தேன்” என்று நெஞ்சைத்தான் காட்டுவோம். எனவே, இந்த விஷயத்தை அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம். பொதுவாக மூளை அறிவுக்கும் மன உணர்ச்சிக்கும் அடையாளப்படுத்தப்படுகிறது.
?இன்னின்ன வரிசைப்படிதான் ஆலயத்தில் வணங்க வேண்டும் என்ற முறை இருக்கிறதா?
– சங்கீதா, சென்னை.
முறை இருக்கிறது ஆனால் எல்லா நேரத்திலும் எல்லா ஆலயங்களிலும் இதைப் பின்பற்ற முடிவதில்லை. உதாரணமாக வைணவத்தில் தாயாரைச் சேவித்து விட்டுத்தான் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பார்கள். ஆனால், பல நேரங்களில் தாயார் சந்நதி போகும் வழி அடைபட்டிருக்கும். அல்லது வேறு ஏதோ விசேஷம் நடந்து கொண்டிருக்கும். எனவே இந்த விஷயங்களைக் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். பெருமாள் சந்நதியில் உள்ள துவார பாலகர்
களிடம் மனதால் அனுமதி பெற்று உள்ளே செல்லுங்கள். அங்கே பெருமாளுடைய திருவடி திருமார்பு பாருங்கள். அந்த திருமார்பில் தாயார் காட்சி தருவார். அந்தத் தாயாரை வணங்கிவிட்டு பெருமாளை வணங்கினால் முறையாக வணங்கியதாக ஆகிவிடும்.
?பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது நாம் என்ன நினைக்க வேண்டும்?
– சத்தியநாராயணன், சென்னை.
பொதுவாகவே நம்மிடம் உள்ள பொருள் சிறிது குறைந்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், பிறந்தநாள் கொண்டாடுகின்ற பொழுது நம்முடைய வாழ்வில் ஒரு வருடம் கழிகிறது. வருத்தப்படவில்லை என்றாலும் கூட, இத்தனைக் காலம் நாம் எதைச் செய்தோம், இனி இருக்கும் காலத்தில் பயனுள்ளபடி என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
?கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்கிற பழமொழி சரியா? நடைமுறையில் ஒத்து வருகிறதா?
– கண்ணன், திருநெல்வேலி.
“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’’ என்றிருக்கிறதே. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையே சுவாமி. ஒரு வித்வானுக்கு இன்னொருவரைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறதே. ஏழாம் பொருத்தமாக அல்லவா இருக்கிறது.
‘‘அப்படியே எல்லா விஷயங்களையும் எடுத்துக் கொள்ளக்கூடாது… நடைமுறையில் அப்படி இப்படித்தான் இருக்கும்.
‘‘இல்லை தெரியாமலா இப்படி சொல்லி இருப்பார்கள்’’.
‘‘அப்படியானால் இப்படி பொருள் கொள்ளுங்கள்… சரியாக இருக்கும்…’’
கற்றாரை, கற்று யாரே (கற்றாரே) காமுறுவர்? என்று எடுத்துக் கொள்ளுங்கள். நடைமுறைக்கு சரியாக வரும்.
The post ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த தங்களின் ஆலோசனை என்ன? appeared first on Dinakaran.