திருமலை: ஆந்திர மாநிலம், அமராவதி தலைமை செயலகத்தில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தை 2047ம் ஆண்டிற்கான, அதன் லட்சிய இலக்குகளை நோக்கி முன்னெடுத்து ஒருங்கிணைந்த தலைமையுடன் திட்டமிடல் மற்றும் புதுமையான நிர்வாகத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாநாட்டில், அரசு சேவைகளை நெறிப்படுத்தவும், பொது நலனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கருத்து செயல் பட்டறையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து பேசியதாவது: எனது நீண்டகால தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஸ்வர்ணந்திரா 2047’ திட்டம் விகாசித் பாரத் என்ற தேசிய தொலைநோக்குடன் இணைந்த திட்டம்.
இதன் மூலம் நிலையான 15 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடைவதிலும், கடன்களை திறம்பட நிர்வகித்து திருப்பிச் செலுத்துவதன் மூலம் நிதிப் பொறுப்பை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படும். லட்சியமான பொருளாதார மைல்கல்லுக்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் 2047ம் ஆண்டுக்குள் தனிநபர் வருமானம் 42,000 அமெரிக்க டாலர்களை அடைதல். 2047ம் ஆண்டுக்குள் ஆந்திரப் பிரதேசத்தை 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரமாக மாற்றுதல், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 2025-26 பட்ஜெட்டை புதுமையானதாகவும் இலக்கு சார்ந்ததாகவும் வடிவமைக்கப்படும் என்றார்.
The post ஆந்திராவில் ‘ஸ்வர்ணந்திரா’ திட்டத்தின் மூலம் 2047ல் தனிநபர் வருமானம் 42,000 டாலர்களை அடையும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.