ஆந்திராவில் பயங்கரம் வெடித்து சிதறிய பட்டாசு தொழிற்சாலை 8 தொழிலாளர்கள் பரிதாப பலி: 7 பேர் காயம்

1 month ago 11

திருமலை: ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், கொடவுரட்லா மண்டலம், கைலாசப்பட்டினம் பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 32 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டு தீ பற்றியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி பட்டாசுகள் வெடித்து சிதறியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையறிந்த உள்துறை அமைச்சர் அனிதா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். தகவல் அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து விசாரனை நடத்த உத்தரவிட்டார்.

The post ஆந்திராவில் பயங்கரம் வெடித்து சிதறிய பட்டாசு தொழிற்சாலை 8 தொழிலாளர்கள் பரிதாப பலி: 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article