ஆந்திராவில் நடைபெற்ற வினோத தடியடி திருவிழா: 70 பேர் படுகாயம்

3 months ago 22

கர்னூல்,

கர்நாடகா ஆந்திரா மாநில எல்லையில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவாரகட்டு மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி மலைக்கோவில். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மல்லேஸ்வர சாமி உற்சவம், தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை தங்களது ஊருக்கு கொண்டு செல்வதற்காக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொள்வது வழக்கம். இதில் வெற்றி பெறும் குழுவை சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்து செல்வார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தடியடி திருவிழாவில் பலர் உயிர் இழப்பதும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைவதும் நடந்து வருகிறது.இதனால் திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக, அம்மாநிலத்தின் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த அம்மாநில போலீசாரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சாமி உற்சவம் தொடங்கியது. விழாவில் பல கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது சாமிக்கு மஞ்சள் பொடி தூவியும், பக்தி பாடல்களை பாடியபடி சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.இதையடுத்து மல்லேஸ்வர சாமி உற்சவரை மலையில் இருந்து மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது மலை அடிவாரத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்திருந்தனர்.

எனினும் போலீசாரின் எச்சரிக்கை, பாதுகாப்பையும் மீறி கல்யாண உற்சவம் முடிவடைந்த பின்னர், உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 24 கிராமங்களை சேர்ந்த மக்கள் 2 குழுக்களாக பிரிந்து தடியடி திருவிழாவில் இறங்கினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள், 2 குழுக்களாக பிரிந்து கைகளில் தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்தியபடி ஒருவரை ஒருவர் தடியால் தாக்கி கொண்டனர். இதில் 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெற்றி பெற்ற ஒரு தரப்பினர் மல்லேஸ்வர சாமியின் சிலையை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். சாமி சிலையை கொண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு விஜயதசமி அன்று மீண்டும் தேவாரகட்டு மலைக்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article