
சென்னை,
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை வழக்கம் போல் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி வந்த சந்தேகத்திற்கு இடமான 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில், மொத்தம் 8 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கும்மிடிப்பூண்டி வரை கஞ்சா கடத்தி வந்து, பின்னர் இங்கிருந்து அவர்கள் சென்னைக்கு பஸ்சில் செல்ல முற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன் (வயது 20) மற்றும் தனுஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.