ஆந்திராவில் இருந்து 4 வயதில் ரயில் ஏறி சென்னை சென்றவர் 31 ஆண்டுக்கு பின் ஊர் திரும்பிய இளைஞர் தாய், தந்தை இறந்த செய்தி கேட்டு கதறல்

3 hours ago 1

திருமலை: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அதோனியில் கடந்த மாதம் 30ம் தேதி மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. அப்ேபாது துணை கலெக்டர் மவுரிய பரத்வாஜிடம் வீரேஷ் ஜனார்தனன் என்ற இளைஞர் சந்தித்து கூறியதாவது: நான் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு அதோனி நகரத்தின் வெங்கண்ணப்பேட்டை என்ற பகுதியில் தந்தை ஜனார்தனன், தாய் பத்மா, பாட்டி அஞ்சனன்மாவுடன் வசித்து வந்தேன். என்னுடைய 4 வயதில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக ரயிலில் ஏறி சென்னை சென்றுவிட்டேன் அதன் பிறகு, நான் மும்பை சென்று ஓட்டலில் வேலை செய்து வருகிறேன்.எனது பெற்றோரை கண்டுபிடித்து தர வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

இதனை கேட்ட துணை கலெக்டர், உடனடியாக அவரது முகவரியைக் கண்டுபிடிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், வீரேஷ் ஜனார்தனனின் விவரங்கள், புகைப்படங்களுடன் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. அதனை அடையாளம் கண்ட வீரேஷ் ஜனார்தனின் தாய் மாமா ஜெகதீஷ், அத்தை லட்சுமி ஆகியோர் போலீசார் மூலம் துணை கலெக்டரை சந்தித்து விவரங்களை கூறினர். இதையடுத்து இருவரும், வீரேஷ் ஜனார்தனனை சந்தித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

வீரேஷ் ஜனார்தனன் காணாமல் போன பிறகு அவரை பல இடங்களில் தேடிய அவரது தந்தை ஜனார்த்தன் கடந்த 1997ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது அம்மா பத்மா கடந்த 2001ம் ஆண்டும், அவரது பாட்டி அஞ்சனம்மா 2011ம் ஆண்டும் உயிரிழந்ததாக தாய் மாமா தெரிவித்தார். இந்த செய்தியை கேட்ட வீரேஷ் மனம் உடைந்து கதறினார். இருப்பினும் தனது தாய் மாமா மற்றும் அத்தை அவரது பிள்ளைகள் மற்றும் உறவுகள் கிடைத்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post ஆந்திராவில் இருந்து 4 வயதில் ரயில் ஏறி சென்னை சென்றவர் 31 ஆண்டுக்கு பின் ஊர் திரும்பிய இளைஞர் தாய், தந்தை இறந்த செய்தி கேட்டு கதறல் appeared first on Dinakaran.

Read Entire Article