மதுரை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய நடிகரும், ஆந்திரா மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மதுரை மாநகர காவல்துறையிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் மனு அளித்துள்ளார். மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில் “ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகரும், ஆந்திரா மாநிலத் துணை முதல்வருமான பவன் கல்யாண் சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது.
சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என பேசி உள்ளார், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும், இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்தும், சமூக பதட்டத்தை உருவாக்கும் விதமாகவும் பவன் கல்யாண் பேசி உள்ளார். திருப்பதி லட்டு பிரச்சினையில், எவ்வித தொடர்பும் இல்லாத சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஒருமையில் பேசியுள்ளார். இரு மாநில மக்களிடம் பகையை உருவாக்கும் செயலில் ஈடுபட்ட பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், நடிகர் பவன் கல்யாண் பேச்சு இந்திய தண்டணை சட்டம் 196 (a), (b) & 197 (1) (d) மற்றும் 352 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும், ஆகவே பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
The post ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மதுரை மாநகர காவல்துறையிடம் வழக்கறிஞர் புகார் appeared first on Dinakaran.