ஆந்திர மாநிலம் சிம்மாச்சலம் கோயில் திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் பலி: தரிசன வரிசையில் காத்திருந்தபோது பரிதாபம்

2 weeks ago 3

திருமலை: சிம்மாச்சலம் கோயில் திருவிழாவில் நேற்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாச்சலம் அப்பன்ன சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் வராஹலட்சுமி சமேத நரசிம்மசுவாமி ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் மட்டுமே சந்தன காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பின்னர் மீண்டும் சுவாமிக்கு சந்தன காப்பு சாற்றி, வெள்ளி கவசம் அணிவிக்கப்படும். ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் சுவாமியின் நிஜரூப தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதன்படி அட்சய திருதியை தினமான நேற்று சுவாமிக்கு சந்தனகாப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை நடைபெற்றது. பின்னர் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளிகவசம், சந்தன காப்பு களையப்பட்டது.

இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சந்தனத்தை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினர். அதன்பிறகு மாநில அரசு சார்பில் அமைச்சர் அங்கானி சத்யபிரசாத், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நேற்றுமுன்தினம் இரவு முதலே சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மலைமீது உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் மேடான பாதையில் ரூ.300 தரிசன டிக்கெட் வரிசை அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்த பாதையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி முதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தரிசன வரிசையில் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அப்போது வரிசையில் நின்றிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் 3 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விசாகப்பட்டினம் கே.ஜி.ஹெச். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 8 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோயிலில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* கட்டிய 20 நாளில் சுவர் இடிந்தது ஏன்?
முதற்கட்ட விசாரணையில் சிம்மாச்சலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அப்போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட சுவரை ஒட்டி மழைநீர் சென்றதால் சுவர் இடிந்து விழுந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் சிம்மாச்சலம் கோயில் திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் பலி: தரிசன வரிசையில் காத்திருந்தபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Read Entire Article