ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய டிஆர்ஓ

3 hours ago 1

*வீடியோ வைரல்- விசாரணைக்கு உத்தரவு

திருமலை : ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஆன்லைனில் டிஆர்ஓ ரம்மி விளையாடிய வீடியோ வைரலானதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் எஸ்சி வகைப்பாடு குறித்த ஒரு உறுப்பினர் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜீவ் ரஞ்சன் மிஸ்ராவை, டிஆர்ஓ மலோலா வரவேற்றார்.

அனந்தபுரம் கலெக்டர் வினோத்குமார், ஸ்ரீ சத்யசாய் மாவட்ட கலெக்டர் சேதன், எஸ்.பி. ஜெகதீஷ் மற்றும் உதவி ஆட்சியர் வினோத்னா ஆகியோர் அதே கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது டி.ஆர்.ஓ. மலோலா அதைப் பொருட்படுத்தாமல் செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் மும்முரமாக இருந்தார். பல சங்கங்கள் ஒன்றிணைந்து எஸ்.சி. வகைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களை சமர்ப்பித்து கொண்டிருந்தனர்.

இருப்பினும் டிஆர்ஓ மலோலா, இதெல்லாம் தனக்கு சம்மந்தம் இல்லை என்பது போல் தனது ஸ்மார்ட்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் உயர் அதிகாரிகள் இருந்தபோதிலும், மாவட்ட வருவாய் அதிகாரி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் தனது நேரத்தை செலவிடுவது குறித்து அங்கு வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவு செய்தார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

டிஆர்ஓ மலோலா அலுவலகத்தில் ஆன்லைனில் கேம் விளையாடுவதையே தனது தொழிலாகக் கொண்டுள்ளதாக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் வருவாய் அதிகாரியின் இந்த பொறுப்பற்ற நடத்தைக்கு மக்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வருவாய் அதிகாரியாக மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஒருவர், ஒரு முக்கியமான பிரச்னை குறித்த கூட்டத்தின்போது இப்படி நடந்து கொண்டுள்ளார் என கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள், இதுபோன்ற அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அனந்தபுரம் மாவட்ட கலெக்டர் வினோத் குமார், டிஆர்ஓ மாலோ ஆன்லைனில் ரம்மி விளையாடுவது குறித்து விசாரணை நடத்த இணை ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விளக்கம் கேட்டு டிஆர்ஓ மலோலாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இணை ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையில் டிஆர்ஓ மலோலா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வினோத் குமார் தெரிவித்தார்.

The post ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய டிஆர்ஓ appeared first on Dinakaran.

Read Entire Article