ஆத்தூரில் பரபரப்பு; கருவின் பாலினம் தெரிவிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் கைது

1 hour ago 1

கெங்கவல்லி: ஆத்தூரில் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பலை சேர்ந்த இருவர், தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அதிரடி ரெய்டில் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிய சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதாக தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில், மருத்துவ குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு, ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மேரி என்பவரது வீட்டில் வைத்து கர்ப்பிணிக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதாக தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, ஆத்தூர் பகுதிக்கு வந்த மருத்துவ குழுவினர், மேற்கு மாதாகோயில் தெருவில் சத்தியா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டில், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சௌந்தரராஜன், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய ஸ்கேன் மெஷின் வைத்திருந்ததும், கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த முனியன் மகன் வெங்கட்ராமன் (எ) வெங்கடேஷ் என்பவர் மூலம் கர்ப்பிணிகளை அழைத்து வந்து ஸ்கேன் செய்ததும் தெரியவந்தது. கர்ப்பிணி ஒருவரை அழைத்து வந்து, பரிசோதனை மேற்கொள்வதற்கு ரூ.12 ஆயிரம் வாங்கிக் கொண்டு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

இது சம்பந்தமாக ஆத்தூர் டவுன் காவல் நிலையத்துக்கு இணை இயக்குனர் சாந்தி தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று சௌந்தரராஜன் (48), வெங்கடேஷ் (45) ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் கைது செய்து ஸ்கேன் இயந்திரங்கள், மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

The post ஆத்தூரில் பரபரப்பு; கருவின் பாலினம் தெரிவிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article