‘எண்ணலங்காரம்’ குறித்து ஒரு கட்டுரை வாசித்தேன். (எண்ணலங்காரம் என்பது ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப் படுத்தி இறைவனைத் துதித்தல்) எண்ணலங்காரத்திற்கு எடுத்துக்காட்டாக திருமந்திரப் பாயிரத்தில் உள்ள ஒரு செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.“ஒன்றவன்தானே; இரண்டவன் இன்னருள்;நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழும்பர்ச் சென்றனன்; தானிருந்தான் உணர்ந்து எட்டே”இந்தப் பாயிரச் செய்யுளைப் படித்த போது இஸ்லாம் கூறும் இறையியல் கொள்கையும் இதுதானே எனும் எண்ணம் தோன்றியது.“ஒன்றவன்தானே”- இறைவன் ஒருவனே, அவனே ஏகன்.“இரண்டவன் இன்னருள்”- இம்மை, மறுமை இரண்டிலும் இன்னருள் பொழிபவன் அவனே.“நின்றனன் மூன்றினுள்”- ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை எனும் மூன்றிலும் நிற்பவன்.“நான்கு உணர்ந்தான்”- நான்கு வேதங்களையும்(தவ்ராத், ஜபூர், இன்ஜீல், குர்ஆன்) உணர்ந்தவன்.
“ஐந்து வென்றனன்”- ஐவேளைத் தொழுகைகளை நியமம் தவறாமல் நிறைவேற்றி, ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வோர்க்கு வெற்றி அளித்து ஆட்கொள்பவன்.“ஆறு விரிந்தனன்”- ஆறு என்றால் வழி. ஷரீஅத் எனும் விரிவான வழிமுறையை அருளியவன்.“ஏழும்பர்ச் சென்றனன்’’ – ஏழாவது வானத்தில் – அண்டவெளியில் சாந்தி மயமாய் விளங்குபவன்.“தானிருந்தான் உணர்ந்து எட்டே”- மண், புனல், அனல், காற்று, வெளி, சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டையும் தன் படைப்பாற்றலின் அத்தாட்சிகளாய் ஆக்கியவன். அவற்றை ஆள்பவன்.அனைத்து வேதங்களும் ஆகமங்களும் பரம்பொருள் ஒன்றே என்றுதான் வலியுறுத்துகின்றன. இதர மதங்கள் அந்தப் பரம்பொருளைப் படைப்புகளின் வடிவத்தில் கண்டு, படைப் புகளையே வழிபடுகின்றன. இஸ்லாமோ பரம்பொருளின் பேராற்றலுக்கு எடுத்துக் காட்டுகளாய்ப் படைப்புகளைச் சொல்லி, அனைத்தையும் படைத்த பரம்பொருளை மட்டுமே வழிபட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறது.
“அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.” (குர்ஆன் 2:29)“அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான். அவன் மலைகளை பூமியில் ஊன்றியுள்ளான், அது உங்களோடு சேர்ந்து சரிந்துவிடக் கூடாது என்பதற்காக. மேலும், எல்லாவிதமான பிராணிகளையும் பூமியில் பரவச் செய்திருக்கிறான். வானிலிருந்து மழைபொழிய வைத்து பூமியில் விதவிதமான தாவரங்களை முளைக்கச் செய்தான்.இவையாவும் இறைவனின் படைப்புகள்… (குர்ஆன் 31:10-11)
ஆகவே அனைத்தையும் படைத்தளித்த அந்த ஏகப் பரம்பொருளையே வழிபடுங்கள் என்கிறது இறுதி வேதம்.அவனையே வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் திருவருளைப் பெறுவோம்.
– சிராஜுல் ஹஸன்.
The post ஆதியும் அந்தமும் அவனே! appeared first on Dinakaran.