ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திமுக உடன்பிறப்புகளின் இரத்தத்தில் ஊறிய உணர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!!

3 hours ago 2

சென்னை: தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனான நான் என்றும் முன் நிற்பேன் என கழக உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இதன் விவரம் வருமாறு;

ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம். அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிட மிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். இனத்தின் அடையாளத்தைத் தக்க வைத்து, தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல்தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்!

இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளத்தைக் கொண்ட இயக்கத்தின் வழிவந்தவர்கள் நாம்.

அப்போதும் இப்போதும் நம்மை எதிர்க்கும் ஒரு சிறு ‘விபீடணக்’ கூட்டத்தை இந்தமண்ணில் எதிர்கொண்டுதான் வருகிறோம். வடக்கின் ஆதிக்கத்திற்கு வால்பிடிக்கும் அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கின்ற முதல் கேள்வி, ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?’ என்பதுதான்.

இந்தியா விடுதலை அடைந்து, தனக்கான அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொண்டு, குடியரசு நாடாக ஆன போது, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாநிலமும்தனக்கான மொழிக் கொள்- கையை வகுத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இந்தியா விடுதலையடைவதற்கு முன்பே, தனக்கான மொழிக்கொள்கையையும் தொலை நோக்குப் பார்வையையும் கொண்டிருந்தது இன்றைய தமிழ்நாடான அன்றைய சென்னை மாகாணம். அதற்கு அடிப்படைக் காரணம், திராவிட இயக்கத்தின் மொழியுணர்வும் இனப்பற்றும்தான். அதுதான், தமிழ்நாடு இன்றளவும் தனித்துவமான மாநிலமாகவும், கல்வியில்-, திறன் மேம் பாட்டில் உலகளாவிய உயர்ந்த வேலை வாய்ப்புகளில் முன்னணியில் நிற்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறது.

தாய்நிலத்தில் ஆழக் காலூன்றி, உலகப்பரப்பை ஆங்கிலத்தின் மூலமாகக் கைப்பற்றினோம்.

தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தாய்மொழியாம் தமிழ் மொழி, இந்திய அரசினால் செம்மொழித் தகுதியைப் பெற்ற முதல் மொழி என்ற பெருமையைப் பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நிலப்பரப்பின் பண்பாட்டு வரலாற்றை எடுத்துக்காட்டும் அகழாய்வுகளில் கிடைக்கும்பானை ஓடுகளில் தொடங்கி, இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு வரை தமிழ் மொழி தன் சீரிளமைத் திறம் குறையாமல் செழித்து வளர்ந்திருப்பதற்குக் காரணம், ஆதிக்க மொழியை என்றென்றும் எதிர்த்து நிற்கும் தமிழர்களின் போராட்டக் குணம்தான்.

தமிழ் மொழியை ஆதிக்க மொழிகளிடம் அடிமைப்படுத்திவிடாமல் காத்து -வளர்த்து, தமிழர்களின் திறனை மேம்படுத்தியதன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்று பல இலக்குகளிலும் உயர்ந்து நிற்பதைஇந்திய ஒன்றிய அரசின் புள்ளி- விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதாரஆய்வறிக்கை பெருமையுடன் குறிப்பிடுகிறது.

நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லைஎன்ப- தால்தான் இருமொழிக் கொள்கையைக்கடைப்பிடிக்கிறோம். மொழிக்கொள்கையில்தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநி- லங்களும் உணர்ந்துவருவதுடன், அதைஉரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது.

உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் நாள் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும், மொழி அறிஞர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அவரவர் தாய்மொழியைக் காத்திட வேண்டும் என்பதனை வலி யுறுத்- தியதுடன், அதற்கு தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பிற மாநிலங்கள் பெற்றுவரும் இந்த விழிப்புணர்வுக்குத் தமிழ்நாடுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதால்தான், ஆதிக்க உணர்வுகொண்ட ஒன்றிய ‘பா.ஜ.க. அரசு, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்’ கீழ் தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தர மறுக்கிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவத்துடன் வன்மம் மிகுந்த வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்.

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே பா.ஜ.க. தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி – சமஸ்கிருதச் சேவகர்களாக இருக்கிறார்கள்.

“எப்பக்கம் வந்து புகுந்துவிடும்-இந்தி

எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?”

-என்று கேட்டவர், திராவிடப் பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

“வடக்கினில் தமிழர் வாழ்வை

வதக்கிப் பின்தெற்கில் வந்தே

இடக்கினைச் செய நினைத்த

எதிரியை, அந்நாள் தொட்டே

‘அடக்கடா’ என்றுரைத்த

அறங்காக்கும் தமிழே! இங்குத்

தடைக்கற்கள் உண்டென்றாலும்

தடந்தோளுண் டெனச் சிரித்தாய்”

-என்றும் அவர் பாடினார். புரட்சிக்கவிஞர் கூற்றுப்படி, இந்த மண்ணில் இடக்கினைச் செய்ய நினைக்கும் எதிரியாக ஆரியமோ, ஆதிக்க இந்தியோ- சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும், எத்தனை கோடியை ஒன்றிய அரசு கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை ஏற்க மாட்டோம்.

“இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு!”என்று துணிந்துசொல்லும் வலிமை நமக்கு உண்டு .

1938ஆம்ஆண்டு நடைபெற்ற இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான முதல் மொழிப் போரில் தந்தை பெரியார் முழங்கினார். தமிழறிஞர்கள் அவர் பக்கம் நின்று முழங்கினார்கள். அன்றைய அரசின் அடக்கு முறையைத் துணிச்சலுடன் எதிர்- கொண்டு,ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்து, சிறைத் தண்டனையை சிரித்த முகத்துடன் ஏற்றவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார். அதே மொழிப்போர்க்களத்தில்தான் பேரறிஞர் அண்ணா முகன்- முறையாக சிறைப்படுத்தப்பட்டார். அய்யாவும் அண்ணாவும் மட்டுமா?

14 வயது பள்ளி மாணவராக, தனது கைகளில் தமிழ்க்கொடி ஏந்தி,

‘வாருங்கள் எல்லோரும் போருக்குச்

சென்றிடுவோம்

வந்திருக்கும் இந்திப் பேயை

விரட்டித் திருப்பிடுவோம்

ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ

தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே’

என்று போர்ப்பரணி பாடி, தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்தவர் நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

மொழிப்போர்க் களத்தில் முதல் பலியான மாவீரர்கள் நடராசன், தாளமுத்து எனத் தொடங்கி, 1965 மொழிப்போர்க் களத்தில் கீழப்பழுவூர்சின்னசாமி, சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்த்தியாகங்களால் ஆதிக்க இந்தியிடமிருந்து தாய்மொழியாம் தமிழைக் காத்த வரலாறு, திராவிட இயக்கத்திற்கும் அதன் அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உண்டு.

உங்களில் ஒருவனான நான் முதன் முதலில் கழக மாநாட்டில் உரையாற்றியதும், இந்திஆதிக்கத்தை எதிர்த்துதான். 1971ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க. மாணவரணி நடத்திய இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில், மாநாட்டு அமைப்பா- ளர்களின் அனுமதியைப் பெற்று, நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் முன்னிலையில்,”தமிழுக்காக எந்தத் தியாகத்தையும்செய்வதற்குத் தயாராக உள்ள மாணவர்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றுதான் முழங்கினேன்.

ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் இரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வரும் போக்கை தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களும்கூட தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 21, 22 ஆகிய தேதிகளில்கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், பெற்றோர்- – ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஒன்றிய அரசு நமக்கு நிதி தர மறுப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, “10 ஆயிரம் கோடி தந்தாலும் இந்தியைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்தேன்.

இதனைக் கேட்ட கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “ஒன்றிய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான 10 ஆயிரம் ரூபாயை காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். தன்னுடைய தாத்தாவும் பாட்டியும் தமிழாசிரியர்கள் என்பதையும் குறிப்பிட்டு, ‘தமிழ் வாழ்க’என்று தன் உணர்வையும் காணொலியாக வெளியிட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு.

ஒரு நன்முகை அல்ல, ஒரு கோடிக்கும் அதிகமான இளம் நன்முகைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்பதாகும். இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே!’ என்று யாரையும் தடுக்கவில்லை. ‘இந்தியை எங்கள் மீது திணிக்காதே!’ என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற் கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன்.

தமிழைக் காத்து ஆதிக்க மொழியை விரட்டியடித்த வீரமிகு வரலாற்றையும், அதற்கான உயிர்த் தியாகங்களையும், இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி தமிழும்- தமிழரும் – தமிழ்நாடும் பெற்ற வளர்ச்சியையும் இந்தத் தொடர் மடல்கள் வாயிலாக விரிவாகப் பகிர்ந்துகொள்வோம். தமிழ்காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனான நான் என்றும் முன் நிற்பேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திமுக உடன்பிறப்புகளின் இரத்தத்தில் ஊறிய உணர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!! appeared first on Dinakaran.

Read Entire Article