ஆண்டுக்கு 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை குற்றாலத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

3 months ago 13

*பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

தென்காசி : ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் குற்றாலத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவதுடன் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றாலம் தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சொந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில் குற்றாலத்தில் சாலை கட்டமைப்பு வசதிகள் சுமாராகவே உள்ளது.

குற்றாலத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, ஐந்தருவி, பழைய குற்றாலம் விலக்கு வழியாக மத்தளம்பாறை செல்லும் ஆகிய நான்கு சாலைகள் உள்ளன. இதுதவிர ஐந்தருவியிலிருந்து இலஞ்சி, தென்றல் நகர் வரை ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலைகள் அனைத்துமே 5 மீட்டர் அகலமுள்ள குறுகலான சாலைகளாகதான் இதுவரை உள்ளன. மிகச்சமீபமாக தற்போது குற்றாலம் முதல் பழைய குற்றாலம் விலக்கு வரையுள்ள 4.2 கிலோமீட்டர் தொலைவு சாலையை 5 மீட்டரிலிருந்து 7 மீட்டர் அகலமாக மாற்றுவதற்கும் பாலங்கள், தடுப்பு சுவர்கள் கட்டுவதற்கும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

மற்ற அனைத்து சாலைகளுமே மிகவும் குறுகலாக தான் உள்ளது. இதனால் சீசன் காலங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே குற்றாலத்திலிருந்து ஐந்தருவி, தென்காசி, செங்கோட்டை செல்லும் சாலைகளையும், ஐந்தருவிலிருந்து இலஞ்சி செல்லும் சாலை ஆகியவற்றையும் அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுலா பயணிகள் மத்தியில் வலுத்துள்ளது.

புலியருவி, பழைய குற்றாலம் விலக்கில் ரவுண்டானா

இதுகுறித்து குற்றாலம் வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள் கூறுகையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து அதிகளவில் கனிம வளங்கள் ஏற்றிய லாரிகள் கேரளாவிற்கு செல்கிறது. இந்த லாரிகளால் தென்காசி நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் லாரிகள் அனைத்தும் குற்றாலம் வழியாகத்தான் கேரளா செல்கிறது. இந்த வாகனங்கள் 16 மற்றும் 20 சக்கரம் உள்ள ராட்சத டாரஸ் லாரிகளாக உள்ளது. இவை பெரும்பாலும் இரவு நேரங்களில் சேர்ந்தார் போல் 20 லாரிகள் வரிசையாக செல்கின்றன.

குற்றாலம் – புலியருவி விலக்கு, தென்காசி-அம்பை சாலையில் மத்தளம்பாறை ஜோகோ நிறுவனம் அருகில் பழைய குற்றாலம் விலக்கு சந்திப்பு ஆகியவற்றில் ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த இரு பகுதிகளிலும் ரவுண்டானா அமைப்பதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும். புலிஅருவி – குற்றாலம் விலக்கு பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர் தென்பக்கம் அதிக இடவசதி உள்ளதாகவும் வடபுறம் குறுகலாகவும் உள்ளது.

இதனால் பெரிய டாரஸ் லாரிகள் குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய குற்றாலம் சாலைக்கு செல்லும்போது விதிகளை மீறி இடதுபுறம் செல்வதற்கு பதிலாக வலதுபுறம் உள்ள சாலையில் ஏறி செல்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனை சாலையின் மத்தியில் அமைப்பதுடன் ரவுண்டானாவும் அமைத்தால் விபத்துக்களை தடுக்க முடியும் என்றார். இதுதொடர்பாக தென்காசி எம்எல்ஏ பழனிநாடாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

The post ஆண்டுக்கு 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை குற்றாலத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article