
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி வித்யா மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் வெண்மணி என்பவரை காதலித்ததால் வித்யாவை அவரது அண்ணன் சரவணனே கொலை செய்ததாக தகவல் வெளியான நிலையில், ஆணவக் கொலை இல்லை என திருப்பூர் எஸ்.பி. விளக்கமளித்துள்ளார்.
வித்யாவை நன்றாக படிக்குமாறு சரவணன் அறிவுறுத்தி வந்ததால், 2 மாதங்களாக சரவணனுடன் வித்யா சரியாக பேசவில்லை என்றும், காதலை கைவிட்டு படிக்குமாறு கூறியபோது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரத்தில், இரும்பு கம்பியால் தாக்கி அவரை கொலை செய்ததாக சரவணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வித்யா இறந்து, ஈமசடங்கு முடிந்த நிலையில் அவருடைய காதலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீண்டும் தோண்டப்பட்டு, வித்யா கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வெண்மணி குடும்பத்தினர் வித்யாவை பெண் கேட்டு வந்ததாக சொல்லப்படும் நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.
இந்த கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, காவல்துறையினர் வித்யாவின் அண்ணனிடம் இது ஆணவக் கொலையா என்று விசாரித்து, அது உண்மை என்னும் பட்சத்தில் உடனடியாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.