ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயம் குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை: கட்டண உயர்வு குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை

3 hours ago 1

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தில் நேற்று ஆட்டோக்களுக்கான புதிய பயணக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சுட்சோங் ஜடக் சிறு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

ஆட்டோ தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை 25க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர். குறிப்பாக ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம், குறைந்தபட்ச கட்டண நிர்ணயம், ஓலா, ஊபர் செயலிகள் ஓட்டுநர்களின் பெரும்பங்கு வருவாயை எடுத்துக் கொள்வது, பைக் டாக்ஸி வரைமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
னர். தனியார் செயலிகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் “கும்டா” மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓலா, ஊபர்களுக்கு பதிலாக அரசு சார்பில் செயலி விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் உயர்வு குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பைக் டாக்ஸி பிரச்னை என்பது உலகலாவிய பிரச்னை. நம் நாட்டிற்கு ஏற்றார் போல அதற்கு சட்டத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும். மஞ்சள் போர்ட் கொண்டு பைக் டாக்ஸி ஓட்டுவது உள்ளிட்டவை தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* கோரிக்கை ஏற்கும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது: தொமுச

பேச்சுவார்த்தை குறித்து தொமுச பேரவை தலைவர் நடராஜன் கூறியதாவது: தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர், ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் சார்பாக 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயும் ஒவ்வொரு அடுத்த கிலோமீட்டருக்கும் ரூ. 25 என்றும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

ராப்பிடோ என்கிற பைக் டாக்ஸி செயலியை பயன்படுத்தி வருகிறார்கள், ஓலா, உபர் ஒவ்வொரு போன்றவர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசே அரசு சார்பில் ஒரு செயலியை உருவாக்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளோம். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், விரைவாக அரசு செயலியை உருவாக்க வேண்டும். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அறிவிக்கும் பட்சத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயம் குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை: கட்டண உயர்வு குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article