வடலூர், ஜன. 12: கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு வடலூர், சுற்றுவட்டார பகுதிகளான நெய்வேலி, காடாம்புலியூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, மருவாய், கருங்குழி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், பண்ருட்டி, மடப்பட்டு, புவனகிரி, வளையமாதேவி, வடக்குத்து, மேட்டுக்குப்பம், கம்மாபுரம், காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் வெள்ளாடு, கொடிஆடு, செம்மரி ஆடுகளை வடலூர் ஆட்டு சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வடலூர் ஆட்டு சந்தை நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். ஒரு ஆட்டின் குறைந்த விலை ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்ச விலை ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post ஆட்டு சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.